Thursday, 16 May 2013

எதிர்கால டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் ஒரு பார்வை

 

டிஜிட்டல் உலகில், அதன் தொழில் நுட்பத்தின் பரிமாணங்களும், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களும் அதிவேகமாக உயர்ந்து வருகின்றன.

இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கின்ற ஒரு சாதனம், குறுகிய காலத்திலேயே மிகப் பழைய சாதனமாக, எந்த வகையிலும் பயனற்ற ஒன்றாக மாறி வருகிறது. இப்போது யார் டயலைச் சுழற்றி தரைவழி இணைப்பு தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர்?
 
பலருக்குத் தங்கள் மொபைல் எண்களே மறந்து போகின்றன. நமக்கு நெருக்கமான மனைவி மற்றும் நம் குழந்தைகளின் தொலைபேசி எண்களைக் கூட நினைவில் வைக்காமல், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களையே நம்பி இருக்கிறோம்.

கம்ப்யூட்டர்களின் இடத்தில் லேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன் என சுழன்று வருகின்றன. இணையத் தொடர்பின் வேகம் மின்னலுக்கு ஒப்பாகி வருகிறது. டிஜிட்டல் திரைகள் விரிந்து, நம் விழிகளின் அசைவின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தும் நாள் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். இவ்வாறு விரியும் டிஜிட்டல் சாதனங்கள் இனி எப்படி அமையும் என்பதை இங்கு காணலாம்.

1. லேப்டாப்:


லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் பிசிக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு வேகமாகக் குறைந்து வருகிறது. அமைதியாக இணைய உலா வர, மின்னஞ்சல் நிர்வகிக்க, பாட்டு கேட்க, படம் பார்க்க என டேப்ளட் பிசிக்கள் பயன்படுத்தப்பட்டன, லேப்டாப் கம்ப்யூட்டர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து திறன் சார்ந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றின் மூலம் அறிவுத் திறனாக்கப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால், அண்மைக் காலங்களில், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களின் செயல்பாடுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் மறைந்து வருகின்றன.

லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களுக்கிடையே, இயக்க முறை ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இணைவாய் இருக்கும் வகையில் மைக்ரோசாப்ட் தந்த விண்டோஸ் 8 இதற்கு முதல் பாலத்தை அமைத்துள்ளது. எதிர்காலம் இனி டேப்ளட் பிசிக்களுடையதாய் இருக்கும்.

13 அங்குல திரை கொண்ட டேப்ளட் பிசிக்கள் இந்த பணியை மேற்கொள்ளும். செயல்பாட்டிற்கு ஈடு கொடுக்கும் வகையில் திறன் கூடிய பிளாஷ் ட்ரைவ்கள் வரத் தொடங்கி உள்ளன. பற்றாக் குறைக்கு ஈடு கொடுக்க க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறை கை கொடுக்கிறது.

இதற்கான இணைய இணைப்பு வேகமும் முறைகளும், எண்ணிப் பார்க்க முடியாத வேகத்தில் அமைந்து வருகின்றன. கூகுள் ஒரு நகரம் முழுமையும் தற்போது உள்ள இணைய வேகத்தினைக் காட்டிலும் 400 மடங்கு வேகத்தில் இணைய இணைப்பு தந்து, இந்த தொழில் நுட்பம் சாத்தியமே என்று காட்டியுள்ளது.

வீட்டில் ஒரு டெஸ்க் டாப் பெர்சனல் கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு, அதனைச் சார்ந்த அனைவரும் கையடக்க டேப்ளட் பிசிக்களைத் தூக்கிச் சென்று, பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைப்பு பெற்று தங்கள் பணியை முடிக்க இயலும்.

2. டேப்ளட் பிசி:

இந்த ஆண்டிலும், இனி வரும் ஆண்டுகளிலும் வேகமான மாற்றத்தைக் காண இருப்பது டேப்ளட் பிசிக்களே. இந்த ஆண்டில், 16 கோடியே 59 லட்சம் டேப்ளட் பிசிக்கள் விற்பனை செய்யப்படும் (2012ல் இது 11.71 கோடி) என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

இது 2016ல், 26 கோடியே 14 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ராசசர் வரிசையிலும், ஏ.ஆர்.எம். ப்ராசசர் இவற்றிற்கு ஈடு கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களில் இவற்றின் சிறப்பான செயல்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு டேப்ளட் பிசிக்கள் சந்தையில், விண்டோஸ் 8 இயக்கத்தில் இயங்கும் டேப்ளட் பிசிக்கள் தங்கள் சிறப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

3. ஸ்மார்ட் போன்:

அதிகம் வியக்கத்தக்க வகையில் தொழில் நுட்ப முன்னேற்றம், மொபைல் ஸ்மார்ட் போன்களில் ஏற்பட்டு வருகிறது. இவற்றில் என்ன எதிர்பார்க்கலாம் என்று பட்டியல் இடலாம். முதலாவதாக, வயர்லெஸ் சார்ஜிங். எந்தவித இணைப்பும் இல்லாமல், இந்த போன்களை சார்ஜ் செய்திடலாம்.

HTC Droid DNA மற்றும் Nokia Lumia 920 ஆகியவை இதற்கான எடுத்துக்காட்டுக்களாகத் தற்போது உள்ளன. அடுத்து, குவாட் கோர் ப்ராசசர்கள் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுவது பெருகும். ஸ்மார்ட் போன்களில், அதிவேக செயல்பாடுகளை மேற்கொள்ளவும், கூடுதல் வேகத்தில் விளையாட வேண்டிய கேம்ஸ்களுக்கு இணையாக இயங்கவும், ஹை டெபனிஷன் வீடியோ படங்களைப் பார்ப்பதற்கும் இவை பெரும் அளவில் உதவிடும்.

அடுத்து, மொபைல் போன்களின் திரைகளைக் குறிப்பிடலாம். 5 அங்குல திரை என்பது இன்றைய நடைமுறையாகி வருகிறது. இன்னும் இதில் புதிய தொழில் நுட்பம் கொண்டு வரப்பட்டு, இதன் பயன்பாட்டினை அதிகப்படுத்தும். முக்கிய செயல்பாடாக, அடுத்து, நாம் பார்க்க வேண்டியது அண்மைக் கள தகவல் தொடர்பு (NFC–Near Field communication) தொழில் நுட்பம்.

2012ல் வெளியான இந்த தொழில் நுட்பம், சென்ற ஆண்டில் பெரிய அளவில் எடுபடவில்லை. இந்த ஆண்டில் இது பரவலாகும் வாய்ப்புகள் அதிகம். என்.எப்.சி. தொழில் நுட்பம் கொண்ட மொபைல் போன்களைப் பல நிறுவனங்கள் தயாரித்து வழங்கி வருகின்றன. ஆனால், இந்த தொழில் நுட்பத்தினை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்பது பலருக்குப் புரியவில்லை. இருப்பினும், இந்த ஆண்டில், இது பரவலாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

4. டிவிக்கள்:

இந்த ஆண்டில் தொலைக் காட்சிப் பெட்டிகளின் அளவில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் திரைக் காட்சிகளின் பரிமாணங்களில் மாற்றம் நிச்சயம் இருக்கும்.

அல்ட்ரா ஹை டெபனிஷன் காட்சித் தோற்றம் கிடைக்கும் வகையில் ரெசல்யூசன் மிக மிக அதிகமாக இருக்கும். பல டிவி தயாரிப்பு நிறுவனங்கள், விரைவில் அல்ட்ரா ஹை டெபனிஷன் திரை கொண்ட டிவிக்களை வெளியிட உள்ளன.

டிவியின் அடிப்படையில் மானிட்டர் திரைகள், அல்ட்ரா ஹை டெபனிஷன் மட்டும் இல்லாமல், குறைவான மின் சக்தியில் இயங்குபவையாகவும், குறைவான தடிமன் உள்ளவையாகவும் இருக்கும். திரைகள் வரிசையில், தொடு உணர் திரைகள் இனி அதிகம் எதிர்பார்க்கலாம். விண்டோஸ் 8 இதனை ஜன ரஞ்சகமாக்கிவிட்டதால், இனி இத்தகைய திரைகளே, சந்தையில் அடிப்படை திரைகளாக இருக்கும்.

5. ஸ்டோரேஜ் டிஸ்க்:

இந்த ஆண்டில் ஹார்ட் ட்ரைவின் விலை தொடர்ந்து குறையாமலே இருக்கும். தாய்லாந்தில் வெள்ளம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மறையவில்லை. ஆனால், சாலிட் ஸ்டேட் டிஸ்க் தயாரிப்பு நிச்சயம் அதிகமாகும்.

இதன் விலை குறையும். டிஜிட்டல் சந்தையில் இன்னும் பல சாதனங்களில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

பிரிண்டர்களில் மூன்று டைமன்ஷன் பிரிண்டிங், ரௌட்டர் இயக்கத்தில் கூடுதல் வேகம், நாம் பேசுவதைப் புரிந்து கொண்டு செயலாற்றும் டிவி, கம்ப்யூட்டர் செயல்பாடுகளையும் ஏற்று காட்டும் தடிமன் குறைவான திரைகள் எனப் பலவற்றைக் கூறலாம்.

இவை இந்த ஆண்டு வெளிவரும்போது அவை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கு காணலாம்.

ஹாட்மெயில் சகாப்தம் முடிகிறது

 

இமெயில் என்றால், அது ஹாட்மெயில் தான் என்ற புகழைப் பெற்று, மின்னஞ்சல் உலகை இணையத்தில் கட்டிப் போட்டிருந்த ஹாட்மெயில், தன் சகாப்தத்தினை முடித்துக் கொள்ள இருக்கிறது. 

இந்தியரான சபீர் பாட்டியா உருவாக்கிய ஹாட் மெயில் தான் இலவச மின்னஞ்சலை உலகிற்கு வழங்கியது. இதனைப் பின்பற்றியே, மைக்ரோசாப்ட் நிறுவனம், மின்னஞ்சல் சேவைக்கு அவுட்லுக் டாட் காம் தளத்தினைத் தொடங்கி இணையாக நடத்தியது. 


ஆனாலும், ஹாட் மெயில் வாடிக்கையாளர்கள், அதைவிட்டு நகர வில்லை. தொடர்ந்து மின்னஞ்சல் உலகில் முதல் இடத்தைக் கொண்டு இயங்கி வந்தது. இதனைக் கண்ட மைக்ரோசாப்ட், சில ஆண்டு களுக்கு முன்னர், ஹாட்மெயில் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியது. 

தொடர்ந்து இயக்கியும் வருகிறது. ஆனால், தன் செயல் பாடுகளை ஒருமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஹாட்மெயிலை மூடி, அதன் பல கோடி வாடிக்கையாளர்களை தன் அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்றும் முடிவை மைக்ரோசாப்ட் அறிவித்தது. 

அறிவிப்பிற்குப் பின்னரும் அவுட்லுக் இயங்கி வந்ததால், அதன் வாடிக்கையாளர்கள் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். வரும் சில மாதங்களில் இதனை முழுமையாக அமல் படுத்தி, ஹாட் மெயில் தளத்தை மூட இருப்பதாக அண்மையில் மைக்ரோசாப்ட் அறிவித்தது. 

இந்த அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், திடீரென ஹாட் மெயில் மூடப்படும் என்பதனைப் பலரால் மனதளவில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்றப்படும் வாடிக்கையாளர்களுக்கு, விண்டோஸ் 8 பயன்படுத்தினால், முற்றிலும் புதிய அனுபவம் காத்திருக்கிறது. 

அவுட்லுக் டாட் காம் தளத்திலேயே பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய இன்டர்பேஸ் தரும் அனுபவம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. இந்த மாற்றத்திற்கான வழி காட்டுதலைச் சென்ற ஆண்டு முதலே மைக்ரோசாப்ட் வழங்கி வந்தது. 

இருப்பினும், உலகெங்கும் உள்ள ஹாட்மெயில் வாடிக்கையாளர்கள் பல்வேறு சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பி உள்ளனர். அவற்றில் சிலவற்றையும், மைக்ரோசாப்ட் அவை குறித்து தந்த தகவல்களையும் இங்கு காணலாம்.


கேள்வி: எத்தனை முறை, மைக்ரோசாப்ட், ஹாட்மெயில் தளத்திலிருந்து அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாறுவதற்கான அறிவிப்புகளைத் தந்தது? 

பதில்: பல மின்னஞ்சல்களை மிக விளக்க மாக, இது குறித்து, மைக்ரோசாப்ட் தந்தது. இதற்கென எவற்றையெல்லாம் அப்டேட் செய்திட வேண்டும் எனச் சுட்டிக் காட்டி, அதற்கான வழிமுறைகளையும் விளக்கியது.
கேள்வி: நான் ஹாட்மெயில் அக்கவுண்ட்டிலிருந்து, அவுட்லுக் தளத்திற்குச் சென்ற பின்னர், மீண்டும் மனது மாறி, ஹாட் மெயில் தளத்திற்கு வர முடியுமா?

பதில்: இன்றைய நிலையில் முடியாது என்று தான் சொல்ல வேண்டும். (அவுட்லுக் டாட் காம் சோதனை முறையில் இருந்த போது, மைக்ரோசாப்ட் இதனை அனுமதித்தது. ஆனால் இப்போது இல்லை.)
கேள்வி:அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு நான் மாறிவிட்டால், நான் ஹாட்மெயில் தளத்தில் சேர்த்து, சேமித்து வைத்த மெயில்கள் எல்லாம் என்னவாகும்?

பதில்: எல்லாமே அங்கு நகர்த்தப் பட்டுவிடும். அப்கிரேட் பட்டன் அழுத்திய சில நொடிகளில், உங்கள் மெயில்கள் அனைத் தும் புதிய தளத்தில் கிடைக்கத் தொடங்கி விடும். 
கேள்வி: எந்த பிரவுசர்கள் அவுட்லுக் டாட் காம் தளத்தினை சப்போர்ட் செய்கின்றன?

பதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8,9,10, கூகுள் குரோம் 17 மற்றும் அடுத்த பதிப்புகள், பயர்பாக்ஸ் 10 மற்றும் அடுத்த பதிப்புகள், சபாரி 5.1 மற்றும் மேக் சிஸ்டம். இவை அனைத்தின் முந்தைய பதிப்புகளிலும் அவுட்லுக் டாட் காம் செயல்படும். 
கேள்வி: என்னுடைய மைக்ரோசாப்ட் முகவரி, விண்டோஸ் லைவ் ஐ.டி., ஹாட் மெயிலுடன் இணைக்கப்பட்டிருந்தால், அவற்றின் கதி என்ன? புதிய மெயில் ஐ.டி. ஒன்று பெற்று, என் அக்கவுண்ட்ஸ் மாற்ற வேண்டுமா?

பதில்: தேவை இல்லை. நீங்கள் @hotmail.com, @msn.com or @live.com என எதனைப் பயன்படுத்தி வந்தாலும், ஹாட் மெயில் தளம் மூடப்பட்ட பின்னரும், அந்த மெயில் ஐ.டிக்களுடன் தொடர்ந்து செயல் படலாம். எப்படி உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல், எந்த மொபைல் சேவை நிறுவனத்தின் சேவையையும் மேற்கொள்ள முடியுமோ, அது போலத்தான். இதற்கு எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்பது இதன் சிறப்பு. மேலும், தற்போதைய அவுட்லுக் சேவை இன்னும் சிறப்பானதாக, வளமானதாக இருக்கும்.
கேள்வி: நான் ஏற்கனவே தனியாக அவுட்லுக் டாட் காம் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கி இருக்கிறேன். என்னுடைய ஹாட்மெயில் அக்கவுண்ட்டும் அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்றப்பட்டால், என் அக்கவுண்ட்களின் கதி என்னவாகும்? இரண்டும் இணைக்கப்படுமா? தனித்தனியாக இயங்குமா? ஒன்று அழிக்கப்படுமா?

பதில்: இரண்டையும் இணைக்க எந்த வழியும் இல்லை. ஆனால் இரண்டு அக்கவுண்ட்களையும் இயக்கி, இரண்டையும் நீங்களே இணைக்கலாம். இதற்கு, அக்கவுண்ட் செட்டிங்ஸ் சென்று, அதில் permissions என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், “manage linked accounts” என்பதில் கிளிக் செய்திடவும். 
கேள்வி: பயனாளர்கள், அவர்கள் விரும்பினால், தங்களுடைய ஹாட்மெயில் அக்கவுண்ட்டைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறார்களா?

பதில்: பலர் தங்களின் மின்னஞ்சல் முகவரியுடன் அன்பால் ஒன்றிப் போய் இருக்கிறார்கள். அது மாற்றப்பட்டால், எங்கே தங்களுடைய அடையாளம் சிதறிவிடுமோ என அஞ்சுகிறார்கள். பலர், தங்கள் மனதை மாற்றிக் கொண்டு புதிய அவுட்லுக் டாட் காம் தளத்தில் புதிய முகவரியுடன் பழைய முகவரி சேவையை இணைத்துக் கொண்டனர். ஆனால், பழைய ஹாட்மெயில் முகவரியையே தொடர்ந்து பயன்படுத்த விரும்புபவர்கள் இன்னும் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இருவகையினருக்கும் ஒரே மாதிரியான சேவை கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
கேள்வி: அவுட்லுக் டாட் காம் தளத்தில் உள்ள காலண்டரை எப்போது மைக்ரோசாப்ட் அப்டேட் செய்திடும்? இப்போது ஹாட்மெயில் ஸ்டைலில் இருக்கும் அதனை, மெட்ரோ ஸ்டைலுக்கு எப்போது மாற்றும்?

பதில்: மைக்ரோசாப்ட் இது குறித்து இன்னும் எதுவும் திட்டவட்டமாகச் சொல்ல வில்லை. விரைவில் இது நடந்தேறும் என்றுதான் அறிவிப்பு விட்டுக் கொண்டிருக்கிறது.
கேள்வி: அவுட்லுக் டாட் காம், ஸ்கைப் தளத்துடன் இணைக்கப்படுமா? 

பதில்: இதற்கு விரைவில் என்ற பதிலைத் தான் மைக்ரோசாப்ட் தந்து கொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பிட்ட காலவரையறையைத் தரவில்லை.
கேள்வி: நான் என்னுடைய மொபைல் சாதனங்களை விண்டோஸ் 8, விண்டோஸ் போன், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களை அவுட்லுக் டாட் காம் தளம் பயன்படுத்தும் வகையில் மாற்றத்தினையும் செட்டிங்ஸையும் அமைக்கலாமா?

பதில்: தாராளமாக செட் செய்து கொள்ள லாம். விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் போன் சிஸ்டங்களுக்கு அமைக்க http://winsupersite.com/article/windowslive/outlookcomtipconfigurewindows8windowsphone143946 என்ற முகவரியில் உள்ள தளத்தில் வழிகள் காட்டப்பட்டுள்ளன. 
ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களுக்கான வழிமுறைகள் http://winsupersite.com/article/windowslive/outlookcomtipconfigureandroidios143977 என்ற முகவரியில் கிடைக்கின்றன.